அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நமது ஊர் கோட்டூர் தோட்டம் வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் நவாஸ்கான்!

>

Monday, June 15, 2015

மனிதப்படைப்பின் நோக்கம்!

        மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!
இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.
உலக மதங்கள் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுகின்றன. உதாரணமாக சில மதங்களின் கோட்பாடுகள், கடவுள் விளையாடுவதற்காகத் தான் மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. இதைத்தான் ‘கடவுள் இரண்டு பொம்மையைச் செய்தான் தான் விளையாட; அவையிரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தான் விளையாட’ என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடியிருக்கிறார். இவ்வாறு தான் ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு பின் வரும் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பிடுகின்றது.

قال تعالى : وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
என மனிதனைப் படைத்த அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்.
ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.
இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.
மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.
மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தோமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல்வேறுபட்ட கோணங்களில் பதில்களை முன் வைப்பார்கள்.
அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.
உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும். மனிதன் கூட தற்போது தான் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தான்.
இவ்வாறு அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, பிறர் தேவையற்று தத்தமது தேவைகளை நிறை வேற்றுவனவாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தான் மிகவும் பலவீனமுள்ளவனாகவும், பிறர் உதவியில் தங்கியிருப்பவனாகவும் காலத்தைக் கடத்துகின்றான். எனவே, நாம் கட்டாயம் சரியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, ஒரு சாதாரன பேனா வாங்கப் போனாலும் கூட நன்றாக நமது மூளையை உபயோகித்துத்தான் அந்தப் பேனாவை வாங்குகின்றோம். இந்தப் பேனா சிறந்ததா அல்லது மற்றதுவா?, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா?, கருப்பு நல்லதா நீலமா? என்று எத்தனை எத்தனை கேள்விகளைக் கேட்டு வியாபாரியைக் குடைகிறோம். அத்தோடு எழுதிப் பார்ப்பதற்கும் தவறுவதில்லை. சில நேரங்களில் அந்தப் பேனா எழுதாமல் போனால் கடைக்காரனை திட்டி விடுகிறோம்.
ஒரு பேனாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, நமக்கும் ஏக தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நிஜமான தொடர்பு பற்றித் தெறிந்து கொள்வதற்குக் கொடுப்பதில்லையே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கின்றது.
நாம் சாதாரன ஒரு பொருள் வாங்குவதில் காட்டும் அக்கரையை விட பன்மடங்கு அக்கரையை நம் விடயத்திலும், நம் மதம் குறித்த விடயத்திலும், நாம் எதற்காப் படைக்கப் பட்டோம் என்ற கேள்விக்கு சரியான விடை காண்பதிலும் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு புத்தி சுவாதீனமுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.
நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டியுள்ள ‘ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’ (51:56) என்ற அல்-குர்ஆன் வசனமானது மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கியுள்ளது.
மேலோட்டமாக இவ்வசனத்தை வாசிக்கும் ஒருவர், தொழுகை, நோம்பு, ஸகாத்து, ஹஜ் போன்ற இன்னும் இதர வணக்கங்களிலேயே நம் காலத்தைக் கடத்தினால் ஏனைய விடயங்களில் நாம் ஈடுபடுவதில்லையா? உழைக்க வேண்டாமா? உண்ண வேண்டாமா? உறங்க வேண்டாமா? குடும்பம் நடத்த முடியாதா? போன்ற கேள்விகளைக் கேற்கலாம். அப்படியானால் இவ்வசனத்தின் கருத்துத்தான் என்ன?
அதாவது வணக்கம் என்பதனை சுருங்கக் கூறின், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை கவனத்திற் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களுக்கமைய நம் ஐம்பெரும் கடமைகள் முதல் தினசரி வாழ்க்கை அம்சங்களும் அமையுமாக இருந்தால் அவையனைத்தும் வணக்கமாகவே கருதப்படும். எனவே ஒரு உண்மையான இறை அடியான் உறங்குவதும் வணக்கமே. ஏனெனில் அவன் தூங்கும் போதும் நபிகளாரின் நடை முறைகளைக் கவனத்தில் கொண்டு தான் உறங்குவான், அப்போது தூக்கமும் வணக்கமாக மாறி விடுகின்றன.ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

No comments:

Post a Comment